சிறுகதைகள்-05
ஏனைய அனைத்து சிறுகதைகளையும் பார்வையிட👇👇
சிறுகதை-01
ஒரு தாய் ஏணியாகிறாள்
சுரேஷ் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான். இரவு நடுநிசியாகியும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் மனம் முழுதும் நாளைய சந்தோஷமான நாளை நினைத்து ஆர்வத்தில் தவித்துக் கொண்டிருக்க அவன் கண்கள் துயில் கொள்ள மறுத்தன. நாளை அவனுக்கு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. அவனால் எப்படித் தூங்க முடியும். அந்த ஒரு நாளை அடைவதற்காக அவன் எத்தனை நாள் தூங்காமல் பாடுபட்டிருப்பான். அந்த நாள் அவனை அடையும் முன்பே அதை எதிர்நோக்குவதற்கு தயாராகி விட்டான். பக்கத்தில் படுத்திருந்த தம்பி ரமேஷ் விழித்துக் கொள்ளாமல் மெதுவாக கட்டிலில் இருந்து எழுந்து போய் விழாவில் பேச வேண்டியவைகளை தயார் படுத்திக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ வந்த சேவலின் குரல் விடியப் போவதை அவனுக்கு அறிவித்தது. சிறிது நேரத்தில் பல சேவல்கள் ஒன்றாக சேர்ந்து கூவின. அவன் தனது ஆயத்தங்களை செய்து வெளியில் வந்து வானத்தைப் பார்த்தான். கிழக்குத் திசையில் ஒரு வெளிச்சம் பரவ இருள் விலகிக் கொண்டிருந்தது. அந்த சூர்யோதயத்தைப் பார்க்கும் போது அவர்களின் வாழ்வில் இருள் மறைந்து ஒளி தோன்றுவதாக அவனுக்குத் தோன்றியது.அப்போது தான் எழுந்த அவனுடைய தாய் கமலம் மகன் எழுந்து விட்டதை அறிந்து அவனுக்கு தேநீர் கொண்டு வந்தாள். அதைப் பருகிவிட்டு அவன் முன்னதாகவே விழாவிற்குரிய ஆயத்தங்களை செய்வதற்கு கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான். கமலம் சாப்பாட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டாள்.
மூவரும் அமர்ந்து காலை உணவை உட்கொண்டனர். அப்போது சுரேஷ் தாயை நோக்கி "அம்மா.....இன்னிக்கி நான் இந்த நெலக்கி வாரதுக்கு காரணமே நீங்கதாம்மா நீங்க பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கப் போகுதும்மா" என்றான் கலங்கிய கண்களை துடைத்தவாறு.
"சுரேஷ்.....இது ஒன்னோட முயற்சிக்கு கெடச்ச வெற்றி. இன்னிக்கி ஆயிரம் பேருக்கு முன்னாடி ஒனக்கு பட்டம் கெடக்கிற காட்சிய மட்டும் கண்ணால பாத்துட்டா அதுவே எனக்கு போதும்பா......" என்று கூறிய கமலம் உணர்ச்சி வசப்பட்டு அழுதாள்.
"ஆயிரம் கண்ணு என்ன பாக்குற சந்தோஷத்த விட ஒங்க ரெண்டு கண்ணால என்னோட வெற்றிய பாக்கணுங்குறதுக்காக தான் நான் இத்தன பாடுபட்டேன்மா இன்னிக்கு நான் பட்டம் வாங்குறப்போ நீங்க மொத வரியில் நின்னு என்ன வாழ்த்தனும்....அப்போ நான் போயிட்டு வாரேன்மா......!" என்று அவளிடம் ஆசிர்வாதம் பெற்று விட்டு கல்லூரியை நோக்கி சென்றான். வைத்த கண் வாங்காமல் அவன் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலம்................
தனது பதினைந்து வயது மகனான ரமேஷை துணைக்கு அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து விழா மண்டபத்தின் வாசலில் சென்று இறங்கினாள் கமலம். ஒருவாறாக பாதுகாவலரிடம் தன்னை அடையாளம் காட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். மண்டபத்தில் ஒரு ஆசனமும் காலியாக இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வளவு கூட்டம். பட்டம் பெறும் மாணவர்களின் குடும்பத்தினருக்காக முதல் வரிசைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அவள் தயங்கிய படியே தனது மகனுடன் முன் வரிசைக்குச் சென்று ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். அந்த வரிசையில் இருந்த மற்ற மாணவர்களின் சொந்தக்காரர்களின் காதிலும்,கழுத்திலும் மின்னிய நகைகளையும்,பட்டுப் புடவைகளையும் பார்க்கும் போது அவர்கள் பெரிய பணக்காரர்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிந்தது. அவளுக்கு அங்கு அமர்ந்திருப்பதற்கு தயக்கமாக இருந்தது. இருப்பினும் மகனுக்காக எதையும் பொருட்படுத்தாமல் ஆசனத்தில் அசௌகரியமாக அமர்ந்துக் கொண்டாள். அப்போது கல்லூரியின் அதிபர்,பிரதம அதிதி ஆகியோர் மேடைக்கு சமூகமளித்தனர். கூட்டத்தில் இருந்தவர்களின் கைதட்டல்கள் மண்டபத்தை அதிரச் செய்தது. அந்த ஓசையைக் கேட்ட கமலத்திற்கு கவலையின் ஓசையைக் கேட்பது போலிருந்தது. அந்த ஓசை அவளை அவளின் கடந்தகால நினைவுகளில் சங்கமிக்கச் செய்தது........
அந்த சிறிய கிராமத்தில் கடற்கரையோரத்தில் தான் அவர்களின் குடிசை அமைந்திருந்தது. மழைக்காலம் வந்தால் அவர்களின் பாடு திண்டாட்டமாகிவிடும்.அவர்களின் வீட்டுக் கூரையில் எத்தனை ஓட்டைகள் என்பதை மழைக்காலத்தில் தான் அறிந்து கொள்ள முடியும். கமலமும் அவள் கணவன் குமாரும் மழைக்காலங்களில் தூங்காமல் கண்விழித்து பத்து வயதில் சிறுவனாகவிருந்த சுரேஷையும்,கைக் குழந்தையாகவிருந்த ரமேஷையும் வீட்டுக்குள் பெய்கின்ற மழையில் இருந்து காத்துக் கொண்டிருப்பார்கள். கமலமோ,குமாரோ படிப்பின் வாசனையைக் கூட அறியாதவர்கள். குமார் கடலுக்குள் சென்று உயிரை பணயம் வைத்து பிடித்துக் கொண்டு வரும் மீன்களை விற்றே அந்த சிறிய குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. நீங்காத வறுமை,தீராத பட்டினி போன்றவை தொடர்ந்து வந்தாலும்,அவர்கள் குறைவின்றி மனமகிழ்ச்சியுடன் இன்பமாகவே வாழ்ந்தார்கள்.
அந்தக் கடலலையின் ஓசை தான் அவர்கள் கேட்கின்ற சங்கீதம்,உறங்க வைக்கின்ற தாலாட்டு என்றவாறு அவ்வோசை அவர்களின் மனதில் பிரிக்க முடியாதவாறு கலந்திருந்தது இவ்வாறு கடலே உலகம் என்று வாழ்ந்த அவர்களின் சந்தோஷம்,எதிர்பார்ப்புகள் எல்லாம் அந்தக் கடலோடு போய்விடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை..............
அது ஒரு பயங்கரமான அமாவாசை இரவு இவ்வுலகெங்கும் இருள் சூழ்ந்திருந்தது. வெளியில் பயங்கரமாக காற்று வீசியது. காலையில் மீன்பிடிக்கச் சென்ற குமார் இன்னும் வீடு திரும்பாததை எண்ணி கமலத்தின் உள்ளம் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தது. கமலம் குமாரின் வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டிருத்தாள். அந்தக் கடற்கரையோரத்தில் குடிசைகளில் எரியும் விளக்கு வெளிச்சத்தைத் தவிர வேறெந்த ஒளியையும் காண முடியவில்லை. வெளியில் அடித்த அந்த சூறாவளிக் காற்று கமலத்தின் இதயத்திலும் வேகமாக அடித்துக் கொண்டு தான் இருந்தது. சுரேஷ் தனது குடிசையில் எரியும் விளக்கு அணைந்து விடாமல் கைகளால் பாதுகாத்துக் கொண்டிருந்தான். சுரேஷின் கண்கள் தூக்கத்தை வேண்டி நின்றன. கமலம் ரமேஷையும்,சுரேஷையும் மடியில் உறங்க வைத்து விட்டு சுவரில் பக்குவமாய்ச் சாய்ந்துக் கொண்டாள். அப்போது அடித்த காற்றில் விளக்கு பக்கென்று அணைந்தது. அவளின் இதயம் படபடத்தது. அந்தக் குடிசையைப் போலவே அவள் உள்ளத்தையும் இருள் சூழ்ந்தது. விழிகளை மெதுவாகத் தடவிய தூக்கத்தில் அவளையறியாமல் கண்களை மூடினாள். அவள் வரையில் உலகே இருளானது........
பொழுது புலர்ந்தது. திடீரென கண்விழித்த கமலத்திற்கு குமார் இன்னும் வீடு வந்து சேராதது நினைவுக்கு வரவே வாசலை நோக்கி ஓடினாள். அங்கு தூரத்தில் மக்கள் கூட்டமாக நின்றிருப்பது தெரிந்தது. மக்களின் அவலக் குரல் காற்றுடன் கலந்து அவளின் காதில் வந்து ஒலித்தது. பதைபதைக்கும் இதயத்துடன் கடலோரத்தை நோக்கி ஓடினாள். சுரேஷ் தம்பியை தூக்கிக் கொண்டு தாயின் பின்னால் ஓடினான். அங்கு கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்த போது நேற்று மீன்பிடிக்கச் சென்று சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஒதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். ஒவ்வொருவரின் முகமாக உற்று நோக்கினாள். அதில் குமாரின் முகத்தைக் கண்ட போது அவளின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அவனின் சடலத்தின் மீது விழுந்து கதறினாள். உள்ளத்தைத் தாக்கிய வேதனையால் வாய்விட்டுக் கதறியழுதாள். சுரேஷ் தனது தந்தையின் நிலையைக் கண்டு கதறியழுதான். குமாரின் முகத்தைப் பார்க்கும் போது அவன் கடைசியாகப் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.........
"என்னங்க......இன்னக்கி காலநில சரியில்லைன்னு பக்கத்து வீட்டு மாமா சொல்லிக்கிட்டிருந்தார். எனக்கென்னவோ மனசு ஒரு மாரியா இருக்குங்க.......இன்னக்கி நிலமய பாத்துட்டு நாளெக்கி போங்களேன்....."கமலம் கூறினாள்.
"கமலம்.........நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது போய் வானத்தப் பாரு எங்க மனசு மாதிரியே தெளிவா இருக்கு........அதோட இன்னக்கி நான் போகலைனா நம்ம புள்ளைங்க பட்டினி தான் கிடக்கனும். கைவசம் இருந்ததெல்லாம் தீந்து போச்சு நான் போய் தான் ஆகனும்.......புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கோ,வீணா மனச அலட்டிக்காத "
இது தான் அவன் கடைசியாகப் பேசிய வார்த்தைகள். போய் தான் ஆக வேண்டும் என்று போனவர் அவனின் குடும்பத்தை தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டான்.அவனின் உடல் சகல மரியாதையுடனும் அடக்கம் செய்யப்பட்டது. கமலத்திற்கு தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் அவளுக்கு கேள்விக்குறியாகவே இருந்தது."அவருக்கு ஏற்பட்ட நெலம என் புள்ளைங்களுக்கு வரக் கூடாது.உயிரப் பணயம் வெச்சி வாழுற இந்த தொழில் இவங்களுக்கு வேணாம். அவரோட உசுர எடுத்த இந்த கடலோட சத்தமும்,பந்தமும் இனிமே எங்களுக்கு வேணாம் எங்கேயாவது போய் எப்பாடுபட்டாவது பசங்கல படிக்க வைச்சு நல்ல படியா வாழ வெக்கனும்"
அவளின் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணத்தினால் அந்தக் கடற்கரையை விட்டு தனது படுக்கையுடன் தனது குழந்தைகளை கூட்டிக் கொண்டு வெளியேறி எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் பட்டணத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள். வந்த இரண்டு நாட்கள் செய்வதறியாது அலைந்தாள் பின் சிலரிடம் விசாரித்து சில கூலி வேலைகளுக்கு ஆள் எடுக்கும் இடங்களை தெரிந்ததுக் கொண்டு அங்கு சென்று வேலை செய்தாள்.அப்போது ஒரு பெரியவர் அவளைப்பற்றி விசாரித்து அவளின் மேல் அனுதாபங் கொண்டு அவர்கள் தங்குவதற்கு ஒரு வாடகை வீட்டை அமர்த்திக்கொடுத்தார்.ஒருவாறாக சுரேஷையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டாள். அன்றிலிருந்து தினமும் காலையில் சுரேஷை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு,ரமேஷை கூட்டிக் கொண்டு போய் வேலை செய்யும் இடத்தில் விட்டு விட்டு,கடுமையாக வேலை செய்து,மாலையாகும் போது வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளையும் செய்து வந்தாள். இவ்வாறாக பதினைந்து வருடங்கள் இயந்திர வாழ்க்கை விட்டாள்.
இந்தப் பதினைந்து வருட காலத்தில் ஒரு சுமை தாங்கியாகவே இருந்திருக்கிறாள். தனக்கென்று எதையும் என்னவோ செய்து கொள்ளவோ முன்வராமல் ஒவ்வொரு வினாடியும் தன் பிள்ளைகளுக்காகவே சிந்தித்தாள்.
எந்த விதமான படிப்பறிவும் இல்லாமல்,எந்த ஒரு உலக விடயங்களையும் அறிந்து கொள்ளாமல் கிணற்றுத் தவளை போல் வாழ்ந்த கமலம்,பட்டணத்திற்கு வந்து எவரின் உதவியும் இன்றி வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது அபூர்வம் தான். தனது பிள்ளைகளுக்கென்று வரும் போது எந்த ஒரு தாயும் இவ்வாறாகவே மாறி விடுகின்றாள்.
சுரேஷ் தனது தாயின் கஷ்டங்களை உணராதவன் அல்ல.கமலம் கல்லுடைத்து,மணல் சுமந்து படுகின்ற கஷ்டங்கள் அவனுக்கு கஷ்டமாகவேயிருந்தது. ஆயினும் அவன் தொழில் செய்து தாயைக் காப்பாற்றும் சக்தி பெற்றவன் அல்ல. அவன் கூலி வேலைகள் செய்வதையும் கமலம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டாள். இவ்வாறாகவே மாதங்கள் சில உருண்டோடின. சுரேஷ் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுத வேண்டிய காலமும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் இரவெல்லாம் கண்விழித்திருந்து கடுமையாகப் படித்தான். சில வேலைகளில் கமலமும் கூடவே கண்விழித்திருப்பாள். சுரேஷ் பரீட்சை எழுதி சிறந்த புள்ளிகளில் சித்தியடைந்தான். அவனுக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் கிடைக்கும் பணம் தாயின் கஷ்டத்தை ஓரளவுக்கேனும் குறைத்து விடும் என எண்ணி மகிழ்ந்தான்.
இப்படியாகவே காலம் கரைந்து கொண்டிருத்தது.அவர்கள் தீபாவளியென்று எதையும் கொண்டாடியதில்லை.தன்னுடைய தூக்கம்,சக்தி,சந்தோஷம் போன்ற அனைத்தையும் தியாகம் செய்து ஒரு ஏணியாக இருந்து சுரேஷை முன்னேற்றிக்கொண்டிருந்தாள்.சுரேஷ் தனது ஆசைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு கல்வியில் அதிகமான கவனம் செலுத்தி சாதாரணதர,உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்து தாயின் வேதனைகளுக்கு மருந்தாக இருந்தான்.இன்று அவள் பட்ட கஷ்டங்களின் பலனை முழுமையாக அடையும் நோக்கில் மகன் பட்டம் பெறுவதைக் காண அவள் உள்ளம் துடித்தது.மீண்டும் பலமான கைதட்டல் ஓசையைக் கேட்டு நினைவுக் கடலிலிருந்து வெளியேறினாள்..............................
"தங்கப் பதக்கம் பெறுவதற்காக திரு.சுரேஷ் குமார் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்"அறிவிப்பாளர் அழைத்தார். சுரேஷ் மேடைக்குச் சென்றான். அவன் கழுத்தில் தங்கப் பதக்கம் போடப்பட்டது."மைக்" அவன் கையில் கிடைக்கிறது.அவன் பேசுகிறான்.ஆங்கிலத்தில் தான் பேசுகிறான்.பூரித்துப் போகின்றது தாயின் உள்ளம்.அவள் கண்களில் கண்ணீர் மழை பொழிந்துக் கொண்டிருக்கின்றது.அவன் பேசுவதை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்,அவனை கண்ணால் பார்த்து ஸ்தம்பித்துப் போனாள். ஒரு கடமையை முடித்து விட்ட சந்தோஷத்துடனும்,புதுத்தெம்புடனும் தனது இளைய மகனின் கையைப் பிடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.தன் கைகளை நம்பி நீந்திக் கொண்டிருக்கும் ரமேஷை கரை சேர்ப்பதற்காக....................................................
FAZEER FATHIMA FAZLA.
KEKUNAGOLLA CENTRAL COLLEGE.
GRADE:13(BIO)
VILLAGE:AMBAGAHALANDA (DIGANA)
DISTRICT:KANDY
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇
Contact : Click here
கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை ஊக்கப்படுத்துங்கள்.