M.I.F.Irthisa Essay

M.I.F.Irthisa Essay

 M.I.F.Irthisa கட்டுரை 


இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்


'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்கிறது ஒரு திரைப்பட பாடல். பரந்த இந்நிலவுலகில் இறப்பும் பிறப்பும் சகசம். வாழ்க்கை என்பது சுழல் சக்கரம் போன்று உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு குழந்தை பிறக்கிறது. அவன் பிறக்கும் போதே நல்லவனாகவே மாசுமறுவற்ற மனம் படைத்தவனாகவே பிறக்கிறான். அவன் வளரும் போது பலவித வடிவங்களிலே வளர்ச்சி பெற்று நல்லவனாகின்றான். அறிஞனாகின்றான். உத்தமனாகின்றான். தலைவனாகின்றான். எனவே அவனது குழந்தை பருவத்தில் இருந்து அவனது வளர்ப்பே அவனது உயர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. அங்ஙனம் வளர்ச்சி பெறும் ஒருவன் சிறுவனாக, இளைஞனாகி, தலைவனாக மலர்கின்றான். இக் கருத்தினடிப்படையில் நோக்கும் போது இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற கூற்று ஏற்கக் கூடியதே.


ஆனால் இளைஞர்கள் அனைவரும் நாளைய தலைவர்கள் என்று கூறிவிட முடியாது. வளரும் பயிர் அதன் வளர்ச்சிப் பருவத்தில் பூச்சி, புழுக்கள் போன்றவற்றால் தாக்க முற்றுக் கருகிப் போவதுமுண்டு. அதேபோன்று வளரும் பருவத்தில் இளைஞர்கள் அத்தகைய தாக்கத்தினை அடையாது நல்லவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்கப்பட வேண்டும். கல்வியும் ஒழுக்கமுமே இதற்கு அடிப்படையாக அமைவனவாகும். நல்ல கல்வியறிவினைப் பெறும் இளைஞன் நல்லொழுக்கம் உள்ளவனாகத் திகழ்வான். இங்ஙனம் கல்வியும் ஒழுக்கமும் அமையப் பெறும் இளைஞர்கள் நாளைய தலைவர்களாக தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதில் ஐயமில்லை.


இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் பலர் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். படித்தும் வேலை வாய்ப்பின்மை, தகுந்த தலைமைத்துவமின்மை, அரசியல் குளறுபடிகள் என்பனவற்றால் விரக்தியின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதை நாம் நிதர்சனமாகக் காண முடிகிறது. எனினும் வேதனைகளைச் சாதனைகளாக மாற்றிச் சரித்திரம் படைத்திட்ட இளைஞர்கள் சிலரையும் நாம் காண முடிகிறது.


இளமையிலேயே இலட்சிய நோக்குடன், குறிக்கோளுடன் இளைஞர்கள் வளர்வார்களேயானால் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல தலைவர்களாக உருவாக முடியும். நல்ல இலட்சியங்கள் நல்ல வழியைக் காட்டும். அவர்களது இலட்சிய வேட்கையும் விடாமுயற்சியும் அவர்களது குறிக்கோளை எய்துவதற்குத் துணை செய்யும். இளைஞர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கல்லூரிகளில் கற்கும் காலத்திலேயே தலைமைத்துவ பண்புகளைக் கற்றுக் கொள்கிறார்கள். மாணவர் மன்றக் கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் போதும் விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு அணிகளுக்குத் தலைமை தாங்கும் போதும் மாணவர் தலைவராக செயற்படும் போதும் தலைமைத்துவ பண்புகளைக் கற்றுக் கொள்கிறார்கள். சாரணர் இயக்கம், சென்.ஜோண்ஸ் ஆம்புலன்ஸ் சங்கம், செஞ்சிலுவை சங்கம் போன்ற சமூக இயக்கங்களில் பங்கு கொள்வதன் மூலமும் இளைஞர்கள் நல்ல பண்புகளைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.


உலக வரலாற்றிலே ஒளிபடைத்த தலைவர்களாக மின்னிக் கொண்டிருக்கும் தலைவர்கள் பலரை நாமறிவோம். அவர்களது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பின் அவர்கள் இளமை முதலே கொண்ட குறிக்கோளை எய்துவதற்காக அல்லும் பகலும் அயராது முயன்றுள்ளமையைக் காணலாம். அவர்கள் இளமைப் பருவத்தே கொண்ட இலட்சிய வேட்கையே இறுதியில் உலகம் போற்றும் தலைவர்களாக அவர்களை உருவாக்கியது என்பதை உணர்த்திட முடியும். மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், வின்சன் சேர்ச்சில், நெப்போலியன் போன்றோர் இதற்கு ஏற்ற எடுத்துக் காட்டுக்களாகும்.


மனிதராக பிறந்தவர் எவர்க்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும்.குறிக்கோளற்றோர் மாண்டவர்க்குச் சமனாவர். எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ்வேன் என்ற இலட்சியம் உடையவர்களே வாழ்வில் வெற்றி காண முடியும். இத்தகைய குறிக்கோள் கொண்ட இளைஞர்கள் வாழ்வில் நன்னிலை பெறுவர். கெட்டவன் என்று பெயர் பெறுவது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களிலேயே அப்பட்டத்தைப் பெற்றிடலாம். ஆனால் நல்லவன் என்று பெயர் பெறுவது மிகவும் கஷ்டம். எனவே இளைஞர்கள் வாழ்வில் நல்லவன் என்ற பெயரினைப் பெற முயல வேண்டும். நல்லவன் என மக்கள் போற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழும் இளைஞர்கள் நாளைய தலைவர்களாவது திண்ணம்.


எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக மிளிர வேண்டுமாயின் அவர்கள் நல்ல கல்வியறிவும், நல்ல ஒழுக்கமும், பிறர் நலம் பேணும் பண்பும் உள்ளவர்களாக நல்ல குறிக்கோள் படைத்தவர்களாக திகழ வேண்டியது மிக மிக அவசியமாகும். நாளைய தலைவர்களாகும் தகுதி அவர்களது வாழ்க்கை வெளியிலேயே பெரிதும் தங்கியுள்ளது என்பதை மறக்கக் கூடாது.


Name:- M I F Irthisa

School:- Zam Refai Hajiar National School

Grade:- 11

Village:- Beruwala

District:- Kaluthara





ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin