Mohamed Askar Jeanis Shiroma சிறுகதை
எழுதப்படாத புத்தகம்
அது ஓர் அழகிய சிறிய கிராமம்.சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அங்கு மின்சாரம், நீர் வசதி கூட இருக்க இல்லை.கிராமத்தில் இரண்டு, மூன்று கிணறுகள் தொலைவில் காணப்பட்டன.அக்கிராமத்தில் ஒரு வீடு களிமண்ணினால் கட்டப்பட்டிருந்தது.அதன் கூரை ஓலையினால் வேயப்பட்டிருந்தது.அருகில் ஒரு கிணறு காணப்பட்டது.வீட்டைச் சுற்றிக் காணப்படும் வயல்வெளியில் தவழ்ந்து வரும் காற்றலையில் அசைந்து கொண்டிருக்கும் நெற்கதிரின் அழகு சொல்லில் அடக்கி விட முடியாதவை.அவ்வீடு மூன்று அறைகளைக் கொண்ட சிறிய வீடு என்றாலும் அதில் அடங்கியுள்ள இன்பம் பேரலைகள்.குளிர்ச்சியான, பால் நிறமுடைய தண்ணீரைக் கொண்ட அக்கிணறு இறைவனால் அக்கிராம மக்களுக்கு அழிக்கப்பட்ட ஒரு அருட்கொடை ஆகும்.அக்கிராமத்துப் பெண்கள் நீரினைப் பெறுவதற்காக குடத்தை தலையில் சுமந்த படி அங்கு வருவார்கள்.
அவ்வீட்டில் தான் இப்றாஹீம் என்பவர் வாழ்ந்து வந்தார்.இப்றாஹீம் மிகவும் அன்பானவர்.அக்கிராமத்து மக்களுடன் மிகவும் பண்பாகப் பழகுவார்.இப்றாஹீமின் முகத்தில் காணப்படும் புன்சிரிப்பு யாருடைய கோபத்தையும் தனித்து விடும் அளவுக்கு வல்லமையுடையது.இப்றாஹீமின் மனைவி கதீஜா ஆவார்.அவர்களுக்கு பத்து பிள்ளைகள்.இருவரும் பிள்ளைகளை மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தார்கள்.வீட்டைச் சுற்றியுள்ள வயலில் கதிரவன் கதிர் சொரிய வெயில் எனப் பாராமல் தனது வேலையைக் கட்சிதமாகச் செய்வார்.தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் இப்றாஹீமுடன் சந்தோஷமாக கதைத்து விட்டுச் செல்வது வழக்கம்.வயலின் இடையிடையே ஒய்யாரமாய் தோற்றமளிக்கும் தென்னை மரங்கள் தலை விரித்தாடின.
முதலாவது பிள்ளையான பாத்திமா குடும்ப கஷ்டம் காரணமாக தனது படிப்பை தரம் ஐந்திலேயே நிறுத்தி விட்டு கதீஜாவுக்கு சமைப்பதற்கும், உடை துவைப்பதற்கும், தனது சகோதரங்களை வளர்ப்பதற்கு உதவியாக இருந்தாள்.பாத்திமா தனது ஒன்பது சகோதரர்களையும் தாய் என்ற இடத்தில் இருந்தே கவனித்தாள்.பாத்திமாவும் திருமண வயதை அடைய தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாள்.
இரண்டாவது பிள்ளையான அன்வர் நன்றாகப் படிக்கும் கெட்டித்தனமுள்ள ஒரு மாணவன்.கணிதம், விஞ்ஞானம் உட்பட அனைத்துப் பாடங்களிலும் திறமையானர்.விளக்கொளியில் தான் கற்றார்.அக்காலத்தில் சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்று உயர் கல்வி கல்வியைத் தொடர முடியாமல் குடும்ப நிலையறிந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக பணிபுரிந்தார்.அன்வர் மிகவும் பண்பானவர்.ஒரு ஈ, எறும்புக்குக் கூட தன்னளவில் பாவம் செய்யாதவர்.இவர் தனது தங்கைகள் மீது மிகவும் இரக்கமானவர்.தான் பெற்ற முதலாவது சம்பளத்தில் தனது தங்கைமார் படிப்பதற்கு சீருடை, சப்பாத்துக்களை வேண்டிக் கொடுத்தார்.அதுவரை காலமும் ஓலையால் வேயப்பட்ட வீடு அவரின் சம்பளத்தினால் ஓடுகள் இடப்பட்டன.
அவ்வாறு நாட்கள் ஓடிக்கொண்டிருக்க மூன்றாவது பிள்ளையான அலியார் டெலிகொம் இல் பணியாற்றி வந்தார்.ஒருநாள் அவர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் விடுதலைப்புலிகள் (LTT) கடத்தப் போவதாக தகவல் கிடைத்தது.அன்வர் அவ்விடத்தை விட்டு தப்பித்து விடுங்கள் என்று கூறுவதற்காக தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார்.தொலைபேசித் தொடர்புகள் அனைத்தையும் விடுதலைப்புலிகள் துண்டித்துவிட்டனர்.அலியாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இப்றாஹீமும், அலியாரும் கண்களில் கண்ணீரோடு அன்வர் பணியாற்றிய பொலிஸ் நிலையத்திற்கு அன்வரைத் தேடிச் சைக்கிளில் சென்றனர்.அங்கு அன்வர் உட்பட ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் காணவில்லை.இப்றாஹீமும்,அலியாரும் வீட்டுக்குத் திரும்பினர்.இப்றாஹீமின் வீடு சோகத்தில் மூழ்கியது.ஐந்து,ஆறு நாட்களுக்குப் பிறகு அன்வரை விடுதலை புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டாக ஒரு பொலிஸார் கூறினார்.அவரும் அன்வருடன் பணிபுரிந்தவர்.அவர்கள் அனைவரையும் கைகளைப் பின்னால் கட்டிய படி ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று நிலத்தில் குப்புர படுக்க வைத்துச் சுட்டனர்.அதில் மரணித்து விட்டதாக நடித்து தப்பித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரே இத்தகவலை இப்றாஹீமிடம் கூறினார்.அந்த இருபத்தியொரு வயதில் எவ்வித பாவமும் அறியாத அன்வரின் உள்ளம் மரணிக்கும் அந்த நொடியில் என்னத்தையெல்லாம் எண்ணியிருக்கும்.நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இப்றாஹீமின் வீடு மரண வீடு போல் மாறியது.துக்க நிலை ஒரு மாதம்,இரு மாதம் அல்ல,,இன்று வரை ஆறாத வடுவாக அவர்களது குடும்பத்தில் காணப்படுகிறது.தனது பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி இப்றாஹீம் தனது சொந்த நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.கிராமத்தில் இருந்த போது செய்த விவசாய நடவடிக்கைகள் எல்லாம் கைவிடப்பட்டன.குடுப்பக் கஷ்டம் காரணமாக நான்காவது பிள்ளையான யூசுப் இலங்கை துறைமுக அதிகார சபையில் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.அந்த வருமானத்தின் மூலமே குடும்பம் எனும் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.யூசுப் தனது வருமானத்தின் மூலம் தங்கைமாரின் கல்விச் செலவுக்கு உதவினார்.அவர்களும் நன்றாகக் கற்றனர்.ஒவ்வொரு தங்கைமாரும் கற்ற பின்னர் அவர்களது திருமண வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு என ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.யூசுப்பும் இறுதியில் திருமணம் முடித்துக் கொண்டார்.இறுதியில் இப்றாஹீமும், கதீஜாவும் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.எவ்வித கள்ளகங் கபடமற்ற மனம் கொண்ட இப்றாஹீம் பிள்ளைகளின் பிரிவு காரணமாக வயது போகப்போக சுய நினைவை இழக்க ஆரம்பித்துவிட்டார்.இறுதியில் எதுவும் சாப்பிட,குடிக்க முடியாமல் உடல் மெலிந்து இவ்வுலகிற்கு விடைகொடுத்தார்.
இப்றாஹீம், கதீஜா எனும் விருட்சத்தில் வந்த ஒரு சிறு கிளைதான் மர்யம்.மர்யத்திற்கு சிறுவயதிலிருந்தே ஆசை மருத்துவராக வர வேண்டும் என்று.அன்றொரு நாள் கல்விச் சுற்றுலா சென்றார் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு,, அது அழகியதும், ஆற்றல் வாய்ந்ததும் என அறிந்தாள்.அன்றிலிருந்து அவளது உள்ளத்தில் எண்ணற்ற ஆசைகளைக் குவித்து வந்தாள்.
சாதாரண தரப் பரீட்சை முடித்துவிட்டு உயர்தரத்தில் உயிரியல் துறையைத் தெரிவு செய்தாள்.அவளும் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தாள்.சீனாவில் உருவான கொரோனா இலங்கையிலும் பரவ ஆரம்பித்தது.பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.பிரத்தியோக வகுப்பு நிகழ் நிலையாகக் கற்பிக்கப்பட்டது.இணைய வசதி கூட அவளது வீட்டில் இல்லை.இது அவளது வாழ்வில் ஏற்பட்ட பாரிய இழப்பாகும்.அவள் பரீட்சைக்கு நன்றாகத் தயாராகவில்லை.பரீட்சை முதல் நாள் நெருங்க நெருங்க மன அழுத்தமும்,கவலையும் மாறி மாறி ஏற்பட்டது.அது அவளுடைய இறுதி வருடப் படிப்பு.இனி என்னால் படிப்பைத் தொடரவே முடியாது, இன்றோடு என்னுடைய படிப்பு முற்றுப் பெற்று விட்டது,இனி நான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று எண்ணினாள்.அயலவர்கள், உறவினர்கள் எனது பெறுபேற்றை பார்த்து என்ன நினைப்பார்கள் என்று எண்ணினாள்.அவள் படித்த பல கட்டுரைகள் அவள் கண் முன்னே வந்து சென்றன.அதில் இந்தியாவில் ஒரு புள்ளியில் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவன் தீக்குளித்தமை,வணிகத் துறையில் கல்வி கற்ற ஒரு மாணவன் தனது இறுதித் தவணைப் பரீட்சையில் இருபத்து மூன்று புள்ளிகள் எடுத்ததை எண்ணி தன்னையே மாய்த்துக் கொண்டமை.மூன்று வருடங்கள் அவள் படித்த படிப்பும், மனதில் அவள் பதித்து வைத்த ஆசைகளும் ஒரு நொடியில் கல்லால் எறிந்து உடைத்து போல் நொருங்கிவிட்டது. அவளினால் ஜீரணிக்க முடியாத நிலை ஏற்பட்டது,இனியும் நான் வாழ்வதில் பயனில்லை என்று எண்ணி தன்னை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு மனதால் பலவீனமடைந்தாள்.அவ்வாறு இருக்க பரீட்சைய முடிவும் வெளியானது.அவள் மூன்று பாடங்களிலும் சித்தியடைவில்லை.மர்யம் இன் உம்மா ஆமினா மர்யத்துடன் எப்போதும் ஒரு நண்பியைப் போன்ற பழகுவார்.இப்றாஹீமின் மகளான ஆமினா இந்த தடவை இல்லாவிட்டாலும்,நீ அடுத்த தடவை உனது இலக்கை கட்டாயம் அடைந்துகொள்வாய் என மர்யத்தை ஆசுவாசப்படுத்தினாள்.
இறைவனின் உதவியுடனும், அவளின் தன்னம்பிக்கையுடனும், அடுத்த நாள் விடிந்தால் காலம் சென்றுவிடும் என்ற எண்ணத்துடன் மர்யம் இரண்டாவது தடவை பரீட்சைக்குத் தயாராகினாள்.விழி பிதித்து, தூக்கம் கலைத்து, உயர்தரம் முடித்து எண்ணியதும் எட்டினாள், பேராவின் பிள்ளையும் ஆனாள்...
✌️✌️✌️
Mohamed Askar Jeanis Shiroma
Mahmud Ladies College Kalmunai
2020 A/l batch
ஏனைய அனைத்து சிறுகதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇